Posts filed under ‘கறி/கூட்டு’

(ச்)சில்லி சிக்கன் ஃபிரை/ chili chicken Fry

தேவையான பொருட்கள்:
_______________________

எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி

செய்முறை
__________

*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும்.

*ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.

*ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.

*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

*ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து கிளறவும்.

* சிறிது நேரம் சென்றபின் ஒரு தே.கரண்டி சோயா சாஸ்,சில்லி சாஸ், 4 தே. கரண்டி டொமாடோ சாஸ் போட்டு கிளறிவிடவும்.

சில்லி சிக்கன் தயார். பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க.

குறிப்பு:
_______
உங்களுக்கு விருப்பமானால் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய் போட்டுக்கொள்ளலாம்.
இஞ்சியை ஓரளவு சிறிதாக நறுக்கினால் போதும்.. உண்ணும்பொழுது அவ்வப்பொழுது சிக்கும் இஞ்சி துண்டுகளின் சுவை அலாதியாக இருக்கும்.
மிகவும் டிரையாக இருக்கவேண்டாமென்றால் பச்சை மிளகாய் வதக்கும் பொழுது சிறிது வெங்காயமும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான அளவுக்கு காரத்தை போடுங்க.

April 28, 2008 at 2:20 பிற்பகல் 2 பின்னூட்டங்கள்

கொஸ்து / பாம்பே சட்னி

தேவையான பொருட்கள்
********************
பெரிய வெங்காயம் : 2
தக்காளி:1
உருளைக்கிழங்கு:2
பச்சைமிளகாய்:5/6
கடலை பருப்பு: 1 பிடி
கடலை மாவு : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
கடுகு,உளுந்து : தாளிக்க
உப்பு தேவையான அளவு
மல்லி இலை

செய்முறை:
**********
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், தக்காளி இவற்றை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும் (1 inch நீளம்). பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து உடன் கடலை பருப்பையும்சேர்த்து வதக்கவும், பின்னர் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய் படபடப்பு அடங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கி உடன் தக்காளியும் சேர்த்து வதக்கி மூடிவைக்கவும்.

5 நிமிடத்திற்கு பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி பாத்திரத்தை மூடவும்.

கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

கொதி வந்தவுடன் கடலைமாவு தண்ணீரை உருளைக்கிழங்கு கலவையில் ஊற்றி நன்றாக கிளறவும்.

5 நிமிடம் சென்றபின் கிளறி கொத்துமல்லி தூவி கிளறவும்.

கொஸ்து தயார்.

இது சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி இவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு:
******
தண்ணீர் சிறிதளவு பயன்படுத்தினால் போதும் இல்லையேல் குழம்பு போல் ஆகிவிடும்.
மிளகாய் காரத்திற்கு ஏற்ப பயன் படுத்தவும்.
உருளைக்கிழங்கு இல்லாமலும் தயாரிக்கலாம்.

April 10, 2008 at 10:22 மு.பகல் 3 பின்னூட்டங்கள்

தக்காளி முட்டைகோஸ் காரக் கறி

இந்த சமையல் குறிப்பை என் அம்மா (mother-in-law) செய்தபொழுது கற்றுக்கொண்டேன்.

தேவையான பொருட்கள்
********************
முட்டைகோஸ் – 1/4 கிலோ
தக்காளி – 1 சிறியது
வெங்காயம் – 1 சிறியது
மி. பொடி – 2 தே. கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – தாளிக்க

செய்முறை:
**********

முட்டைகோஸை 1/2 அங்குல நீளத்திற்கு நன்றாக நறுக்கிம்கொள்ளவும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு,உளுந்து போட்டு தாளித்து உடன் வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் இவற்றையும் உடன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின்னர் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸையும் சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வாணலியை மூடி அவ்வப்பொழுது கிளறி வரவும்.

தண்ணீர் நன்கு சுண்டியதும் ஒரு தேக்கரண்டி எண்னை விட்டு கிளறி 1 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.

தக்காளி முட்டைகோஸ் காரக் கறி தயார்.

குறிப்பு:
******
முட்டை கோஸ் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் தண்ணீர் அளவுக்கதிகமாகாமல் இருக்கட்டும் இல்லையேல் overcook(தமிழ் பெயர் என்ன?) ஆகி பதார்த்தம் சுவையிழந்துவிடும்.

முட்டை விரும்பிகள் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி 5 நிமிடம் வைத்திருந்து எடுக்கலாம். சுவை கூடும்.

உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். உடன் சிறிது புளி சேர்த்தால் இன்னும் சுவைக்கும்.

April 4, 2008 at 11:12 பிற்பகல் 3 பின்னூட்டங்கள்


பக்கங்கள்

அண்மைய இடுகைகள்


Follow

Get every new post delivered to your Inbox.